தில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ஒரேநாளில் 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் விசாரணையில் இது வதந்தி என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலமாக பள்ளிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
அச்சுறுத்தலைத் தொடர்ந்து மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் பள்ளிக்கு வந்திருந்தாள் அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.