தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அனைவரும் பலியாகினர். பலியானவர்கள் ஷபிபுல் (30), ரபிபுல் (30), முட்டு அலி (45), ரூபினா (25), டோலி (25), ஹாஷிபுல் மற்றும் குழந்தைகள் ருக்சானா (6) மற்றும் ஹசினா (7) என அடையாளர் காணப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பெரிய குடியிருப்பையொட்டி சிறு குடில்களில் வசிப்போரை அதிகாரிகள் காலி செய்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஐஸ்வர்யா சர்மா கூறுகையில், “இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு பழைய சுவர் இடிந்து விழுந்தது. சிறு வியாபாரிகள் அதன் அருகில் தங்கள் ஜக்கிகளை வைத்திருந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாங்கள் அவர்களை வெளியேற்றியுள்ளோம், ”என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு
தலைநகர் தில்லியில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடாமல் பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமையும் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.