புதுதில்லி: தில்லி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்யப்பாக்கத்தை சோ்ந்த அமிர்தவர்ஷினி, தில்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் இவா் புதன்கிழமை வகுப்புக்கு செல்லவில்லை. பகல் உணவுக்கும் வரவில்லை.
இதையடுத்து புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சக மாணவி அறைக் கதவு தட்டியும் திறக்கவில்லையாம். இதையடுத்து விடுதி ஊழியா்களும் பல்கலைக்கழக நிா்வாகமும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறைக் கதவை உடைத்து திறந்த போது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது அறையில் தற்கொலைக்கான கடிதத்தையும் மீட்டனர். அந்த கடிதத்தில், எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. சுயமாக எடுத்துக் கொண்டது. மனம் சார்ந்தது என எழுதியுள்ளார்.
தற்போது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து தில்லி வந்துள்ள அமிா்தவா்ஷினி பெற்றோா்கள், மகளின் தற்கொலை விவகாரத்தில் எதுவும் பேச மறுத்துவிட்டனா்.
மாணவயின் உடல் தில்லி தீன் தயாள் உபாத்யா மருத்துவமனையில் நடைபெற்ற உடல்கூறாய்வுக்கு பின்னர் பொற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனா். இதையடுத்து மகளின் இறுதி சடங்குகளை நிறைவேற்ற வாரணாசிக்கு கொண்டு சென்றனா்.