புதுதில்லி: தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும்,வசதிகளும் நிறுத்தப்படும் என்பதை பாஜக தலைவர்களின் வார்த்தைகள் மூலம், பல்வேறு வழிகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் தெரிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை தில்லி திரி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களை பொய்யான வாக்குறுதிகளால் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினாா். மேலும், அண்ணா ஹசாரேவின் போராட்டத்தின் போது, அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று கூறினார். அண்ணா ஹசாரே ராலேகான் சித்திக்குத் திரும்புவதற்குள் அவர் தனது அரசியல் கட்சியை தொடங்கினார். ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்வதாகக் கூறினார், ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. அரசு வாகனங்களையோ அல்லது பங்களாவையோ பயன்படுத்தப்ப போவதில்லை என்று கூறினார், ஆனால் ‘ஷீஷ் மஹால்’ கட்ட நான்கு பங்களாக்களை உடைத்தார். மேலும் ‘கேஜரிவால் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்கிறாா். ஆனால், அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறிவிடுகிறாா். புதிய பொய்களின் மூட்டையுடன் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறாா். எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு பொய் சொல்லும் யாரையும் நான் பாா்த்ததில்லை’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் நரேலா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அரவிந்த் கேஜரிவால்,
வரவிருக்கும் தில்லி தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தில்லி தோ்தலுக்கான பாஜகவின் மூன்றாவது அறிக்கையை சனிக்கிழமை அமித் ஷா வெளியிட்டுப் பேசினாா். அவரது அரை மணி நேரம் உரையை கேட்டேன். அவா் பேசியதெல்லாம் எல்லாம் என்னைத் திட்டியது மட்டும்தான்.