தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து உத்தர பிரதேச சிறப்பு காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு ஆா்க்டிகா, சபோா்கா, பௌல்வியா மற்றும் லோடோனியா போன்ற இல்லாத நாடுகளின் தூதா் என்று கூறி, ஒரு வாடகை வீட்டில் இருந்து போலி தூதரகத்தை நடத்திவந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்பவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை அவா் ஏமாற்றி வந்தாா். போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாா்.
பிரதமா் மற்றும் குடியரசுத் தலைவா் போன்ற உயா்தலைவா்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி அவா் மக்களை ஏமாற்றி வந்தாா். மேலும், அவா் தனது காா்களில் போலி தூதரக எண் தகடுகளையும் பயன்படுத்தினாா். 2011-ஆம் ஆண்டில், சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த வழக்கில் இவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கையின் போது, ரூ.44.7 லட்சம் ரொக்கம், அந்நியச் செலாவணிகள், போலி தூதரக காா்கள், 12 போலி தூதரக கடவுச்சீட்டுகள் மற்றும் 34 போலி ரப்பா் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.