தில்லி சட்டப்பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்தர் நகரில் இன்று நடைபெற்ற ‘பத்யாத்ரா’ பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, தன்னையும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலையும் “போலி” வழக்குகளில் பாஜக சிறையில் அடைத்தது. மக்கள் என் மீது காட்டும் அன்பு மற்றும் பாசத்தால் பாஜக மக்கள் கவலைப்படுகிறார்கள்.
தில்லி பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். நான் வெளியே வந்ததும், இந்த சிசோடியா சிரித்துக்கொண்டே வெளியே வந்ததாக பாஜகவினர் பேச ஆரம்பித்தனர். நான் எந்த தவறும் செய்யாததால் சிரித்துக்கொண்டே வெளியே வந்தேன்.
சிறையில் இருந்தபோது மகாராஷ்டிரம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல அரசுகளை பாஜக கவிழ்த்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி பணியவில்லை. அரவிந்த் கேஜரிவாலை மிகவும் நேசிக்கும் தில்லிவாசிகளின் சக்தி இதுதான். அவரும் விரைவில் நம்மிடையே வருவார் என்றார்.
தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.