தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டை தடுக்கும் வகையில் வணிக வீதிகளில் சாதாரண உடையில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் திரண்டு வருகின்றனர்.
குறிப்பாக தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பண்டிகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் அருண் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய 3 விதமான பணிகளில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில் 8, வண்ணாரப்பேட்டை-2, கீழ்ப்பாக்கம்-4, பூக்கடை-2 என 4 இடங்களிலும் மொத்தம் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தவாறு போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 4 தற்காலிகக் காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தல், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தல், கூட்டத்தில் தொலையும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அதன்மூலம் குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.நகரில் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக முகம் அடையாளம் காணும் (எப்ஆர்எஸ்) செல்போன் செயலி மூலம் போலீஸார் சுழற்சி முறையில், குழுக்களாகப் பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ்-அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் பரிமாற்றம் செய்தும், குற்றச் செயல்கள் நடக்காமல் காத்தும் வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்தில் உள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளைச் சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிக்க சாதாரண உடையில் ஆண், பெண் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.