திருவண்ணாமலை: “திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1,875 ஊராட்சி மன்றங்களுக்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் விழா மற்றும் 803 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடியில் வங்கி கடனுதவி வழங்கும் விழா திருவண்ணாமலையில் இன்று (அக்.19) காலை நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கடனுதவி வழங்கி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “கனமழைக்கு மக்களோடு மக்களாக திமுக அரசு இருந்து செயல்பட்டது. அரசுக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். சென்னையில் 10 செ.மீ., கூட மழை பெய்யவில்லை என சிலர் கூறுகின்றனர். வட சென்னை மாவட்டத்தில் 25 முதல் 30 செ.மீ., மழை பெய்துள்ளது. மழை பெய்த ஓரிரு நாட்களில், மழையின் சுவடே இல்லாத நிலையை உருவாக்கியது திமுக அரசு. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மக்களை காப்பாற்றியதற்கு முழு காரணம், முதல்வரும், திராவிட மாடல் அரசும்தான். இதற்கு என்னுடன் தோளுடன் தோள் நின்று வழிகாட்டிய அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி. அடுத்து வரக்கூடிய மழை காலங்களிலும் மக்களை காக்கும் நம்முடைய பணி தொடரும்.
தமிழகத்தில் ரூ.86 கோடியில் 12,500 ஊராட்சி மன்றங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை 23 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், தமிழகத்துக்காக விளையாடி பெருமை சேர்ந்துள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச தடகள வீரர்கள் பவித்ரா, யுவராஜ் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விளையாட்டு துறையில் சாதித்து பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து ஊக்கமளிக்கும் வகையில் சாதனை படைத்து வருகின்றனர். இவர்களை போன்று 100 வீரர்களை அடையாளம் காணும் லட்சியத்துடன் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் கடந்தாண்டு 5 லட்சம் வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 11 லட்சம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வர் கோப்பை என்பது மாபெரும் இயக்கமாக மாறி உள்ளது.
100 பேருக்கு அரசு வேலை: முதல்வர் கோப்பைக்கு ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 36 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டதில், இந்தாண்டு 5 விளையாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.37 கோடியாக முதல்வர் உயர்த்தி வழங்கி உள்ளார். இந்தியாவிலேயே மாநில அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டியில், தமிழக அரசுதான் பரிசுத் தொகையை அதிகம் வழங்குகிறது.
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தியும், வெற்றிக்கு துணை நிற்கவும் திராவிட மாடல் அரசு உதவி வருகிறது. 3 ஆண்டுகளில் 1,300 வீரர்களுக்கு ரூ.36 கோடியில் உயரிய ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கி உள்ளார். அரசு மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் அரசு பணி வழங்கப்பட உள்ளன.
பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 6 வீரர்களில் 4 பேர் பதுக்கத்துடன் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு, 2 ஆண்டுகளில் 513 பேருக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
530 கோடி பயணங்களில் மகளிர்: வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மகளிர் நலன் உட்பட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மகளிர் வாழ்க்கை தரம் உயர, பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்திட, பணிக்கு செல்லும் பெண்களுக்கு விடியல் பயண திட்டத்தை அறிமுகம் செய்து ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் முதல் கையேழுத்திட்டுள்ளார். 530 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். மாதம் ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகிறது.
கூலி தொழில் உள்ளிட்ட பணிக்கு செல்லும் மகளிர் சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். மேலும் பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய கொண்டு வரப்பட்ட புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்றரை லட்சம் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் முதலிடம்: இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்பு உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிகளவில் மகளிர் வேலைக்கு செல்லும் பட்டியலிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் திட்டம் வழங்கப்படும்.
அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது. இந்த சாதனை பயணத்தில் விளையாட்டு துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இதற்காகதான், கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான், விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டு வீரருக்கும் இருக்கும் அனைத்து குணங்களும், திறமைகளும் கருணாநிதியிடம் இருந்தது. அதனால்தான், யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். கருணாநிதியிடம் இருந்த போர் குணங்களையும், திறமைகளையும் வீரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் ஓராண்டுக்குள் ரூ.10 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்” என்றார்.