தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் மன்றாடிய பெண்கள் | Special committee inspection as per order of High Court in Maha Deepam lighting area in Thiruvannamalai

1286163.jpg
Spread the love

திருவண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்கப்படும் திரு அண்ணாமலை மீது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பு குழுவினர் இன்று (ஜூலை 27) ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியரிடம், ‘குடியிருப்புகளை அகற்றக் கூடாது’ என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

அக்னி திருத்தலமான திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையாரே காட்சி தருவதாக ஐதீகம். 11 நாட்களுக்கு தீப தரிசனத்தை காணலாம். மேலும் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் 14 கி.மீ., தொலைவு உள்ள திரு அண்ணாமலையை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில் மட்டுமின்றி கடந்த ஓராண்டாக தினசரி கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுகின்றனர்.

தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநில பக்தர்களுடன் வட இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டு பக்தர்களும் கணிசமாக வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டும், தியானம் செய்து ஆன்மிக பயணத்தை தொடர்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற திருத்தலமான திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலை மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பச்சையம்மன் கோயிலில் இருந்து ரமண ஆசிரமத்தை கடந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு பல நூறு ஏக்கரில் 12,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியை முறையாக பெறவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகளும், செப்டிக் டேங்குகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் வனத்துறை, வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவையாகும். இந்த நிலையில், மகா தீபம் ஏற்றப்படும் மலையே மகேசனான திரு அண்ணாமலையிலும், கிரிவல பாதையின் இருபுறமும் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், “அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசின் அனுமதி இல்லாமல் மலையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ளும் கிரிவல பாதையிலும், மலையிலும் உள்ள பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மலையில் சிமென்ட் சாலை, குடியிருப்புகள், செப்டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மலையை லே அவுட் போட்டு விற்பனை செய்துவிடுவர். மலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, குடிநீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வழக்கின் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, “திருவண்ணாமலை மலையே சிவனின் ரூபமாகத்தான் உள்ளன. மலையில் எப்படி குடியிருப்புகள், கழிப்பிடங்கள், செப்டிக் டேங்கு கட்ட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து, திருவண்ணாமலை மலை மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் அருகே புதுத் தெரு பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் உயரத்துக்கு மலை மீது ஏறிச் சென்று ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி, மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) குருசாமி ஆகியோர் இன்று (ஜுலை 27) நண்பகலில் ஆய்வு பணியை தொடங்கினர்.

பின்னர், செங்கம் சாலையில் (கிரிவல பாதை) அக்னி தீர்த்தக் குளம் அருகே மலை மீது அமைந்துள்ள பாண்டவேஸ்வரர் கோயில் மற்றும் குளத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பே கோபுர தெருக்களில் மலை மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர். வருவாய் துறையின் வரைபடங்கள் மூலம் ஆய்வு செய்த, குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.

ஆட்சியர் காலில் விழுந்த பெண்கள்: மேலும் அவர்கள் சென்ற வழித்தடத்தில் இருந்த குடியிருப்பு விவரங்களை ஆட்சியரிடம் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி கேட்டறிந்தார். அப்போது ஆட்சியரிடம், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடியிருப்புகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த சமயத்தில் பெண்களில் சிலர், ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனின் காலில் விழுந்து, வீடுகளை அகற்ற வேண்டாம் என மன்றாடி அழுதபடியே கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தார். ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கையை தயார் செய்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் மூலம் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *