திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்துவிட்டதை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தவறான தகவலை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பரப்பி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் இடையே தென்பெண்ணையாற்றில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (டிசம்பர் 6ம் தேதி) நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் கடந்த 2-ம் தேதி அதிகாலை விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றுள்ளது. அப்போது தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களை இணைக்க, நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றபோது, பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும், அதிக தூண்களை அமைக்க வேண்டும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2.40 லட்சம் கனஅடி நீர்: இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமலும், அதிகபட்ச நீர் சென்றதை கணக்கீடு செய்யாமல் அவசர கதியில் நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தை கட்டியதன் விளைவு, பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 1972-ம் ஆண்டு, 2.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ஏற்ப, கட்டுமானப் பணியை வடிவமைத்து கட்டப்பட்டிருந்தால், பாலம் சேதமடைந்து இருக்காது. ஆனால், ஒரு லட்சம் கனஅடிக்குள் தண்ணீர் செல்வதாக கணக்கீடு செய்து பாலம் கட்டி உள்ளனர். அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் குறைபாடு காரணமாக மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனக் குறைவால் பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.
7 பாலமும், 4 பாலம் விவரமும் – அதிமுக ஆட்சியில் 7 பாலங்கள் உடைந்ததாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தவறான பொய்யான செய்தியை தெரிவித்துள்ளார். 7 பாலங்கள் உடைந்ததாக சொல்லிவிட்டு, 4 பாலங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார். இதுவும் உண்மையல்ல. விழுப்புரம் அடுத்த தளவானூரில் பாலம் உடைந்ததாக சொல்கிறார். இது பாலம் கிடையாது, தடுப்பணை. அதிமுக ஆட்சியர் கட்டப்பட்டது. இரு புறங்களில், மண்கரை அடித்து செல்லப்பட்டதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. தடுப்பணை அப்படியே உள்ளது. தடுப்பணை சேதமடையவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் நாக நதி குறுக்கே, ரூ.8 லட்சம் மதிப்பில் ஒரு கல்வெட்டுதான் கட்டப்பட்டது. பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பாலம் அடித்து செல்லப்பட்டதாக சொல்லப்படுவது தவறான செய்தி.
படைவீடு ராமர் கோயில் குறுக்கே கமண்டல நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்ததாக கூறுவதும் தவறு. 2010-ல் திமுக ஆட்சியில், ரூ.13.06 கோடியில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2015-ல் தண்ணீர் அதிகமாக சென்றால், இருபுறமும் அடித்து செல்லப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் சீரமைக்கப்பட்டது. திமுக ஆட்சியல் கட்டப்பட்ட பாலம்.
30 ஆயிரம் கனஅடிதான் திறக்க முடியும்: கடலூர் மாவட்டம் சிங்காரத்தோப்பு பாலம் இடிந்ததாக கூறுவதும் தவறு. கான்கீரிட் தூண் சரிந்ததால், அதன் மீதிருந்த தளம் பாதிக்கப்பட்டது. பின்னர், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதுதான் நிலை. ஆனால், வேண்டுமென்றே தவறான தகவலை பொதுப்பணித் துறை அமைச்சர் தந்துள்ளார். தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்துவிட்டது, இதனை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தவறான செய்தியை தெரிவித்துள்ளார். தற்போது, கெடிலம் ஆற்றின் குறுக்கே திமுக ஆட்சியில் கட்டப்படும் பாலமும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது உறுதியான பாலங்கள். இதனை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை சுற்று பகுதியில் 50 செ.மீ., மழை பெய்ததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகளவு நீர் வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் திறக்க முடியும். எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான தண்ணீரை, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விட்டதாக தெரிவித்தனர். செம்பரம்பாக்கம் – அடையாறு வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறியதால், அடையாற்றில் கலந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இதுதான் உண்மை. உண்மைக்கு புறமான செய்தியை திமுக வெளியிட்டுள்ளனர்” என்று பழனிசாமி கூறினார்.
காங்கிரஸும், பாஜகவும் ஒன்றுதான் – பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்: “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கேள்விக்கு, அதுபற்றி தெரியவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்” என்றார்.
“திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. மண் சரிவு குறித்து தமிழக அரசின் நிலைபாடு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்ற கேள்விக்கு, ஐஐடி குழுவினர் ஆய்வு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பக்தர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள், மேலும் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டுமானங்களில் தரம் இல்லை. ஆட்சியின் நோக்கமே கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். கட்டப்படும் கட்டிடம், பாலம் ஆகியவை உறுதித்தன்மை இல்லை என்பதற்கு தொண்டமானூர் பாலம், ஆற்றில் அடித்து செல்லப்பட்டதே சான்று என்றார்.
போளூர் ரயில்வே பாலத்தை கட்டி முடிக்காமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, திமுக ஆட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட பாலங்களை அதிமுக ஆட்சியில் கட்டி முடித்தோம். திமுக ஆட்சியின் மெத்தன போக்கு காரணமாக பாலம் கட்டும் பணியானது காலம் கடந்துகொண்டிருக்கிறது. பாலம் கட்டும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தரமான கட்டுமான பணியை மேற்கொள்ளும் பெரிய நிறுவனங்களிடம் அதிமுக ஆட்சியில் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. திமுக ஆட்சியில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணியை ஒப்படைக்கின்றனர்.
பேரிடர் நிவாரண நிதியை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு மறுப்பது தொடர்பாக கேள்விக்கு, தமிழகத்துக்கு பேரிடர் நிதியை கேட்டால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் உடனடியாக நிதியை விடுவிப்பது கிடையாது? ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால், ரூ.10 கோடி கொடுப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோதும், பேரிடர் நிதி முழுமையாக கொடுக்கவில்லை. மண் சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்” என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.