தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் என்னென்ன? – சென்னை காவல் ஆணையர் பட்டியல் | chennai commissoner list 19 restrictions on bursting crackers for Diwali

1332650.jpg
Spread the love

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை காவல் ஆணையர் அருண் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் விபரம்:

  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.
  • பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.
  • பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
  • பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.
  • மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
  • பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.
  • எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.
  • ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.
  • பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  • குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
  • பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.
  • பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
  • பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.
  • பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.
  • பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

> கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்பொழுது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.

> தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள 19 பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும்” என காவல் ஆணையர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *