கோவை: “தீபாவளி தினத்தன்று ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதே திமுக அரசின் சாதனை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை வருகை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்துக்கு என எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.
தமிழக அரசு எப்போது கேட்டாலும், மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என தெரிவிக்கிறது. ரூ.5,000 கோடி செல்விட்டதாக கூறுகின்றனர். எங்கே செலவு செய்தனர் என்பது தெரியவில்லை. சத்துணவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் குளறுபடி. சட்டப்பேரவையில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அமைச்சர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் தொடர்பே இருக்காது. தொழில் துறை முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். இதுதான் அவர்களின் செயல்பாடு. எந்தக் கட்சியாக இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை.
திருநெல்வேலியில் நான் களம் இறங்குவதற்கு அச்சப்படுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் எந்த அடிப்படையில் கூறுகிறார் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் அமைதியான மண்டலம் கொங்கு மண்டலமாகும். தீபாவளி தினத்தன்று ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இதுவே, தமிழக அரசின் சாதனை. வெகு விரைவில் இவை மாற்றி அமைக்கப்படும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.