சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டும் மாணவர்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பல்வேறு அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வழங்கியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படலாம். இது தவிர, உயிர்சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படக் கூடும். இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும், தடுப்பதும் நமது கடமையாகும். எனவே, பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதன்படி, பட்டாசுகளை கொளுத்தும் போது தளர்வான ஆடைகள், எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது அருகே ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதேபோல், கூட்டமான இடங்கள், தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். பெற்றோர் முன்பு பிள்ளைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.