சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்கள், ரயில்களில் திருட்டு, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் 1,250 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் குற்றச்சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7 டிஎஸ்பி-க்கள், 25 ஆய்வாளர்கள், 95 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 1,250 பேர் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தீவிர பாதுகாப்புப் பணிதொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலைய நுழைவாயில்களில் அனைத்துப் பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதிக்கப்படுகின்றன.மேலும், 24 மணி நேரமும் தண்டவாள ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும், மகளிர் பெட்டிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, அனைத்து ரயில் நிலையங்களிலும் குற்றப்பிரிவு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சந்தேக நபர்களைக் கண்காணிக்க சாதாரண உடையணிந்த காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்களில் வெடி பொருட்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் நடைமேடைகள் மற்றும் ரயில் நிலைய நுழைவு வாயில்கள் கண்காணிக்கப்படுகின்றன. இதுதவிர, ரயில் நிலையங்கள், ரயில்களில் சுற்றித்திரியும் சந்தேக நபர்களைப் பிடிக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.
மேலும், வடமாநிலக் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய் படை உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில்வே காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.