சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி விட்டனர். பயணிகள் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில்,4 ரயில் நிலையங்களில் அக்.29,30 ஆகிய தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டுமே தினசரி 3 லட்சம் வரை பயணம் செய்வார்கள். தீபாவளியொட்டி, பயணிகள் கூட்டம் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நெரிசலை குறைக்கவும், பயணிகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் கூடுதலாக நியமனம் செய்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பயணம் செய்வோரை வழியனுப்ப வரும் ஒருவருக்கு பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. எனவே, பயணிகள் நெரிசலை தடுக்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்க, இது உதவியாக இருக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்கள், மருத்துவ தேவையுள்ள பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.