சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சில அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம், பரிசுப் பொருட்களை ஊழியர்கள் பெறுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவிட்டார்.
2 நாட்களாக சோதனை: இதையடுத்து, மாநிலம் முழுவதும் புகார்களுக்கு உள்ளான அரசு அலுவலகங்கள், சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 37 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.37 லட்சத்து 74,860 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.