சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக கடந்த 16-ம் தேதி முதல் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை சுமார் 3.50 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாகப் பயணித்தனர்.
தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல், புத்தாடை, இனிப்பு வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்ததால், சென்னையின் முக்கிய சாலைகள் பரபரப்பாக காணப்பட்டன.
இதேபோல, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தொடர்ச்சியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமான ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. அனைத்து வாகனங்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கத்துக்கு சிறப்புப் பேருந்துகள் வருவதில் தாமதம் நிலவியது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காத்திருக்கும் பயணிகளின் களைப்பை போக்க கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேருந்துகள் சுங்கச்சாவடிகளில் நெரிசலில் சிக்காமல் தனி வழித்தடம் வழியாக பயணிக்க போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஆம்னி பேருந்துகளை முடிந்தவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆம்னி பேருந்து கூடுதல் கட்டண புகார்கள் தொடர்பாக குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல, தெற்கு ரயில்வே சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தென் தமிழகத்துக்கு பயணிப்போர் என லட்சக்கணக்கானோர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் திரண்டனர். முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடம்பிடித்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் பாதுகாப்பு பணியில் ஆர்பிஎஃப் போலீஸார் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமேசுவரம், திருநெல்வேலிக்கு சென்ற விரைவு ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொருட்கள், துணிமணிகள் வாங்க மக்கள் திரண்டதால் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
இவ்வாறு கடந்த 3 நாட்களில் அரசுப் பேருந்து, ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்றும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.