சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மரியாதை அந்நியர் ஆதிக்க எதிர்ப்பு உணர்வுக்கு வித்திட்ட வீரர் என புகழாரம்
சென்னை: விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை யொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ-க்கள் அரவிந்த் ரமேஷ், கணபதி, பிராபகர ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறைச் செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையொட்டி முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்ன மலையின் பிறந்தநாள் இன்று. அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை.அவர் வீரமும் புகழும் வாழ்க’’ என தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருவிக தொழிற்பேட்டையில் உள்ள சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, பா.வளர்மதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார்.
தமிழக பாஜக சார்பில் தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மூத்த நிர்வாகிகள் விடியல் சேகர், முனவர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, தவெக சார்பில் பொதுச்செய லாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.