காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் 900-ம் நாளை விரைவில் எட்ட உள்ளது. பல்வேறு கட்சிகள் தெரிவித்த சம்பிரதாய ஆதரவைப் போலவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தவெக சார்பில் தீர்மானம் போட்டார்களே தவிர போராட்டம் நடைபெறும் இடத்தின் பக்கம் கூட யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. இதற்காக 13 கிராமங்களைச் சேர்ந்த 5100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்தப் பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் போராட்டம் வரும் ஜனவரி 10-ம் தேதி 900-வது நாளை எட்டுகிறது.
இது குறித்து இந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “எங்களுக்கு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் பெரும்பாலானோர் ஆதரவு சம்பிரதாயத்துக்காகவே உள்ளது. ஆனாலும் தளர்ந்து விடாமல் எங்களுக்குள் கூடி தினந்தோறும் இரவு நேரத்தில் போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்றனர்.
விஜய் ஆதரவு எப்படி? – தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கடந்த அக்டோபர் 24-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள விஜய் புதிதாக தொடங்கியுள்ள கட்சியில் இருந்து தமக்கு ஆதரவான குரல் வந்ததை அந்த மக்கள் கொஞ்சம் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
போராட்டக் குழு சார்பில் தமிழ வெற்றிக் கழகத்தின் தலைதர் விஜய்க்கு நன்றியும் தெரிவித்தனர்.ஆனாலும் தவெக தீர்மானம் போட்டதோடு சரி. போராட்டம் நடத்தும் எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. விஜய்க்கு அடுத்த நிலையில் உள்ள அக்கட்சியின் தலைவர்கள் கூட நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் சுப்பிரமணியிடம் பேசியபோது, “விஜய் எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தோம். உடனடியாக பத்திரிகை மூலம் நன்றி தெரிவித்தோம். அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் எங்கள் கிராமத்துக்கு அழைக்கவும் முடிவு செய்தோம். அதற்காக அவரை சந்திக்க தேதி, நேரம் கேட்டுள்ளோம். அவர் எங்களை சந்திப்பார் என்றும், வலிமையான ஆதரவை தருவார் என்றும் நம்புகிறோம்” என்றார்.

இதுகுறித்து தவெக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசுவிடம் கேட்டபோது, “எங்கள் தலைவர் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட வேண்டு என்று கூறிவிட்டார். போராடும் மக்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார்.
அந்தப் பகுதி இளைஞர்கள் கூறுகையில், “900 நாள் போராட்டம் எங்கள் மக்களை சோர்வடைய வைத்துள்ளது. அரசிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. எங்கள் கிராமத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. எங்களுக்கு சம்பிரதாய ஆதரவே பலரிடம் இருந்து வருகிறது. சம்பிரதாய ஆதரவு இல்லாமல், எங்களுடன் இணைந்து களத்தில் நிற்கக் கூடிய வலிமையான ஆதரவு கிடைத்தால் எங்கள் போராட்டம் இன்னும் வீரியமாகும்” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். என்ன செய்யப்போகிறார் விஜய் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.