இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 30) தொலைபேசியில் பேசினார் .
அப்போது, உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் எனவும் மோடி உறுதியளித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
”மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மேம்பாடுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசினேன். நமது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதையும், பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதையும் உறுதி செய்வது முக்கியமானது. அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும்” என மோடி பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடானதொலைபேசி உரையாடலில் பேசியதாக வேறு எந்தப் பிரச்னைகள் குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.
கடந்த வாரம் முழுக்க லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா, நபில் காவுக் உள்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் எக்ஸ் தளப் பக்கத்தில், இஸ்ரேலின் போர் விமானங்களின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் நபில் காவுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.