வெட்டப்பட்ட தலை வளரத் தேவையான வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களை கிளைடெல்லமே கொடுத்து உதவுகிறது. மேலும் தலை வெட்டப்பட்ட நிலையில் கடும் பட்டினியில் இருக்கும் மண்புழு விரைவில் வாய் மற்றும் பிற உறுப்புக்களை உருவாக்க வேண்டும். புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வது போல் வெட்டப்பட்ட மண்புழுவின் செல்களும் மிகவும் வேகமாக வளர்கிறது. புற்றுநோய் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு குறிக்கோளற்று வளர்கிறது. இழந்த தலையை உருவாக்கக் கட்டுக்கோப்பாகவும் அதே நேரத்தில் வேகமாகவும் செல்கள் வளர்ந்து இழந்த உறுப்புக்களை மண்புழு உருவாக்கிக் கொள்கின்றன. அதாவது புற்றுநோய் கட்டுப்பாடில்லா செல் பிரிதலின் விளைவு. இழந்த உறுப்பை உருவாக்குதல் கட்டுப்பாடான செல் பிரிதலின் விளைவு. இவ்வளவுதான் இரண்டுக்கும் இடையேயான முக்கிய வித்தியாசம்.
ஒருவழியாக ஏழாவது நாளில் மண்புழு தனது வாயை உருவாக்கி முடித்துச் சாப்பிடத் தொடங்குகிறது. அதேவேளையில் மண்புழு தன் தலையில் மூளையையும் திரும்ப வளர்த்துவிடுகிறது. மூளையைத் திரும்பப் பெற்ற மண்புழு தன் கூட்டத்துடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறது. இதனைப் பார்க்கும் போது மண்புழு திட்டமிட்டே தன் வயிற்றுப் பகுதியில் தனக்கு வேண்டிய நுண்ணுயிரிகளுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து வளர்த்து வருவது போல் தெரிகிறது.

ஆன்டிபயாட்டிக் கொடுத்து உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றால் வெட்டப்பட்ட தலையை மண்புழுவால் மீண்டும் வளர்க்க முடியவில்லை. காரணம் மண்புழுவின் உடலில் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து விடுகிறது. அதனால் வெட்டப்பட்ட மண்புழுக்கள் இறந்து விடுகின்றன. இந்த சோதனை நமக்கு உணர்த்துவது என்னவென்றால் புண்ணை ஆற்ற மற்றும் சேதமான உறுப்புக்களை மீண்டும் உருவாக்கக் குடல் வாழ் நுண்ணுயிரிகள் பெரிதும் உதவுகின்றன என்பதுதான். நாமும் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவதை நிறுத்துவது நம் நீண்டகால உடல் நலத்திற்கு நல்லது.
மண்புழுவிற்குக் கண்கள் கிடையாது என்பது நம்பிக்கை. ஆனால் இவை வெளுத்து வாங்கும் வெயிலில் வெளியே தலைகாட்டாது. மாறாக இரவில் வெளியே உலாவும். கண்கள் இல்லாமல் எப்படி இவற்றால் ஒளியைக் கண்டறிந்து தவிர்க்க முடிகிறது என்பது விந்தை.
2022ல் இந்த மண்புழுவின் முழு மரபணுத் தொகுப்பையும் (Whole genome) ஆவணப்படுத்தினோம். இந்த மரபணு ஆராய்ச்சியில் அரஸ்டின் (arrestin) என்ற ஒரு புரதத்தின் உற்பத்தி தகவலைத் தாங்கியிருக்கும் ஒரு மரபணு எங்கள் கவனத்தை ஈர்த்தது. காரணம் இந்த அரஸ்டின் புரதம் நம் கண்களில் மட்டுமே உற்பத்தியாகும். இந்த அரஸ்டின் புரதம் வேலை பார்க்கவில்லை என்றால் நமக்குக் கண் தெரியாது.
அப்படி என்றால் அரஸ்டின் மண்புழுவிலும் பார்வை சார்ந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என எண்ணினோம். இதனை உறுதி செய்ய, அரஸ்டின் புரதம் மண்புழுவில் எந்த இடத்தில் உற்பத்தியாகின்றது எனக் கண்டறியச் சோதனைகள் செய்தோம். இந்த சோதனையின் முடிவு எங்களை வியப்புக்கு உள்ளாக்கியது. காரணம் மண்புழுவின் வெளிப்புறத் தோலில் வட்டவடிவத்தில் இரண்டு பொட்டு போன்று இந்த அரஸ்டின் உற்பத்தியாகிறது எனக் கண்டறிந்தோம். மண்புழுக்களுக்கும் கால்கள் உண்டு. இவை சீட்டே (setae) என அழைக்கப்படுகிறது. இவை ஒரு அறையில் பக்கவாட்டுப் பகுதியில் தலா இரண்டு ஜோடியும், வயிற்றுப் பகுதியில் இரண்டு ஜோடியும் என மொத்தம் எட்டுக் கால்கள் உள்ளன. பக்கவாட்டுப் பகுதியில் உள்ள இரண்டு ஜோடி கால்களைச் சுற்றிதான் இந்த பொட்டு வடிவான இரண்டு கண்கள் உள்ளன. மேலும் இந்த கண்கள் நம் கண்களைப் போல் பல கோணத்தில் திசுக்களை வளைத்து, சுருக்கி மற்றும் விரித்துப் பார்க்கும் படி அமைந்திருக்கிறது!