துப்பாக்கி சூடு நடத்தி முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸார் | Special police force arrested the main accused after firing Theni

1356210.jpg
Spread the love

தேனி: உசிலம்பட்டி அருகே காவலரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரள எல்லையில் தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான தலைமைக் காவலர் முத்துக்குமார்(36), கடந்த 27-ம் தேதி நாவார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றபோது, அங்கிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இதில் தேனி காக்கிவாடன்பட்டி பொன்வண்ணன்(29), பொம்மையகவுண்டன்பட்டி பாஸ்கரன்(28), பிரபாகரன்(29), சிவனேஸ்வரன்(28) ஆகியோருக்கு தொடர்புள்ளதும், அவர்கள் கேரளாவுக்கு தப்ப முற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில், திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே, எஸ்பி.க்கள் சிவபிரசாத், பிரதீப், அரவிந்த் ஆகியோர் நேற்று முன்தினம் தேனியில் முகாமிட்டனர். வனப் பகுதியில் 6 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டவர்கள் கம்பம் வனச்சரகப் பகுதியில் பதுங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீஸார், அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது பொன்வண்ணன், ஆயுதத்தால் போலீஸாரை தாக்கத் தொடங்கினார். இதில் காவலர் சுந்தரபாண்டியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஆனந்த், துப்பாக்கியால் பொன்வண்ணனை மூன்று முறை சுட்டதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த காவலர் சுந்தரபாண்டியன், குற்றவாளி பொன்வண்ணன் ஆகியோர் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மீது ஏற்கெனவே சிறுமியை திருமணம் செய்த போக்சோ வழக்கு, திருமணப் பிரச்சினையில் உறவினரைக் கொன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்ட பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோர் உடன் பிறந்த சகோதாரர்கள். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு தொடர்பான பிரச்சினையில், இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இன்னொருவரான சிவனேஸ்வரன் மீது, நண்பரின் தந்தையைக் கொலை செய்த வழக்கு, வழக்கறிஞர் கடத்தல் வழக்கு, குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *