துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் “தானியக் களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன்ற முக்கியப் பயிர்கள் அதிகளவில் விளைகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த செழிப்பான நிலம் மர்மமான முறையில் பாதாளத்திற்குள் மறைந்து வருகிறது. இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட ராட்சத மண்குழிவுகள் (Sinkholes) திடீரெனத் தோன்றி, விவசாய நிலங்களை விழுங்கி வருகின்றன. இந்தக் குழிகள் சில சமயங்களில் 100 அடிக்கும் மேல் அகலமாகவும், 160 அடிக்கும் மேல் ஆழமாகவும் இருப்பதுடன், வயல்களையும், சாலைகளையும் அச்சுறுத்துகின்றன.

இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கான முதன்மைக் காரணம், கோன்யா சமவெளியின் தனித்துவமான புவியியல்தான். இந்தப் பகுதி சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்ற எளிதில் கரையக்கூடிய பாறைகளால் ஆன “கார்ஸ்ட் நிலப்பரப்பு” (Karst Terrain) ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக, நிலத்தடி நீர் இந்த பாறைகளைக் கரைத்து, பூமிக்கு அடியில் பெரிய குகைகளையும், வெற்றிடங்களையும் உருவாக்கியுள்ளது.
முன்பு, இந்த நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்ந்தன. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களாக, காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளின் கலவையே இந்தச் சரிவுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.