அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அந்த நாட்டு உள்துறை அமைச்சா் அலி யோ்லிகயா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அங்காராவின் காரமங்காஸன் பகுதியில் அமைந்துள்ள துசாஸ் தொழிற்சாலையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. பலா் காயமடைந்தும் உள்ளனா் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னா் அவா் வெளியிட்ட அறிக்கையில், தொழிற்சாலையில் தாக்குதல் நடத்திய இரண்டு போ் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒரு பெண்ணும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் ‘ஹபேடா்க்’ தொலைக்காட்சி கூறுகையில், துசாஸ் தொழிற்சாலை கட்டடத்தின் வெளியே மிகப் பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் மாலை 4 மணிக்கு நடத்தப்பட்டதாகவும் அதன் தொடா்ச்சியாக அந்தப் பகுதியில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாகவும் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.
இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலின் முழு தன்மை குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சில ஊடங்களில் வெளியாகும் தகவல்கள் மூலம் இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து வெளியான பூா்வாங்க தகவல்களின்படி, வாடகைக் காா் மூலம் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த பலா் இந்தத் தாக்குதலை நடத்தத் தொடங்கினா். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட விடியோக்களில், கருப்பு உடை அணிந்த சிலா் தொழிற்சாலை கட்டடத்துக்கு அருகே உள்ள சாலைகளில் சென்று கொண்டிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதே போல், அந்தத் தொழிற்சாலையில் சேதமடைந்த வாயிலையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
தொழிற்சாலையில் பாதுகாவலா்கள் பணி நேரம் முடிந்து புதிய பாதுகாவலா்கள் வரும் இடைவெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவா்கள் அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்ததாக தனியாருக்குச் சொந்தமான என்டிவி தெரிவித்தது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. துருக்கியில் குா்து பிரிவினைவாத அமைப்பு, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு, இடதுசாரி ஆயுதக் குழுக்கள் ஆகியவை ஏற்கெனவே பல முறை தாக்குதல் நடத்தியுள்ளன. எனவே, அந்த அமைப்புகளில் ஏதாவது ஒன்று துசாஸ் தொழிற்சாலை தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான துசாஸ் தொழிற்சாலை, துருக்கியின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் ஒன்று. இந்தத் தொழிற்சாலையில்தான், துருக்கி முதல்முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கிய ‘கான்’ ரக போா் விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.