சேலம்: துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், மக்கள் செல்வாக்கு குறையவில்லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. ஸ்டாலின் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் பலிக்காது. துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது.
எத்தனை துரோகிகள் கட்சியை வீழ்த்த முயன்றாலும், அத்தனை பேரையும் வீழ்த்தி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடக்கிறது. போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதாக பெருமையாக கூறுகின்றனர். பாலியல் வன்கொடுமையை போக்சோ சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதால்தான் தடுக்க முடியும். நிவாரணம் கொடுப்பதால் அல்ல.
திமுக அரசு தனக்கு வேண்டப்பட்டவர்களை டிஜிபியாக கொண்டுவர வேண்டுமெனக் கருதி, அதற்கான பட்டியலை அனுப்பவில்லை. உள்ளாட்சி பணி நியமனத்தில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளது. 5.50 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 75,000 பேர் பணி ஓய்வுபெற்ற நிலையில், 50 ஆயிரம் பேரைத்தான் அரசுப் பணியிடங்களில் நியமித்துள்ளனர். படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றும் ஒரே கட்சி திமுக. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. அனைத்து தரப்பினருக்கும் அதிமுகதான் பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுகதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகையை மையப்படுத்தி, வாக்குகளைப் பெற திமுக அரசியல் தந்திரம் செய்கிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில், அதிமுகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிப்பார்கள்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.