இத்தகைய சூழலில் இன்றும் `சீன ஊடுருவல்’ விவகாரத்தை ராகுல் பெரிதாக்க, அவை ஒத்திவைக்கப்பட்டது. வெளியே வந்தவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, `பிரதமருக்கு இந்தப் புத்தகத்தை வழங்குவேன். அவர் படிக்கட்டும். மக்களுக்கு உண்மை தெரியட்டும்’ என்றார்.
முன்னதாக அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மக்கர் துவாரில் (Makar Dwar) ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் `PM is Compromised’ என்ற பேனரைக் கையிலேந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திய இணை அமைச்சர் (ரயில் போக்குவரத்து துறை மற்றும் உணவு உற்பத்தித் துறை) ரவ்நீத் சிங் பிட்டு (மாநிலங்களவை உறுப்பினர்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் மற்றும் காங்கிரஸாரை நோக்கி, `ஏதோ கார்கில் போரை வென்றுவிட்டு வந்திருக்கிற மாதிரி’ எனக் கூறி, கடந்திருக்கிறார். உடனே ராகுல், `இதோ ஒரு துரோகி நடந்து வருகிறார். அவர் முகத்தைப் பாருங்கள்’ என சக கட்சியினரிடம் சொல்ல… அவர்கள் அனைவரும் ஆமோதித்து ஆரவாரம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து ராகுல் ரவ்நீத் சிங் பிட்டுவை நோக்கி, `ஹலோ பிரதர். என்னுடைய துரோகி நண்பா. கவலைப்பட வேண்டாம், நீங்கள் சீக்கிரம் காங்கிரஸுக்குத் திரும்பி வந்துவிடுவீர்கள்’ எனக் கூறி…. ஹேண்ட்ஷேக் செய்ய கையை நீட்டினார். ஆனால் ரவ்நீத் சிங் பிட்டு, அதைத் தவிர்த்துவிட்டு, `நாட்டை விற்றுவிட்டனர். தேஷ் கே துஷ்மன்’ என்றபடி அங்கிருந்து கடந்து சென்றார்.
ரவ்நீத் சிங் பிட்டு தற்போது பாஜக-வில் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சரவையிலும் இருந்தாலும், அவர் முன்னர் காங்கிரஸில்தான் இருந்தார். 2021-ல் மக்களவை காங்கிரஸ் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார்.
முன்னாள் காங்கிரஸ்காரரான ரவ்நீத் சிங் பிட்டு – ராகுல் காந்தி இடையே நடந்த இந்த உரையாடல் தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.