“‘கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், ‘Yellow 5’, ‘B1’ போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன.
மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ், முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என மார்க்கெட்டில் பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன

கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில் மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம். தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free) குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும்.