திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹர்பா பாத்திமா எனப் பெயர் வைத்தனர்.
அக்பர் பாஷா தனது குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள அமீர் பாஷா என்பவரின் வீட்டு மேல்மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை, அக்பர் பாஷா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி அஸ்லியா தஸ்மின், குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

மதியம் 12 மணியளவில், வீட்டில் இருந்த 3 மாத பெண் குழந்தை மாயமாகிவிட்டதாகக் கூறி அஸ்லியா தஸ்மின், தரை தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் சென்று கூறியுள்ளார். அஸ்லியா தஸ்மினுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளரும் குழந்தையை தேடியுள்ளார். அப்போது, சந்தேகப்பட்டு வீட்டு படிக்கட்டின் கீழுள்ள தண்ணீர்தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில், மர்மமான முறையில் குழந்தை இறந்துகிடந்தது.