இந்த அதிசயத்தை அறிந்து ஊரே வியந்தது. காளை மாட்டின் மணியை அந்த மரத்தில் கட்டி, மரத்தையே மாடசாமியாக வழிபட ஆரம்பித்தார்கள். மாலை சாற்றுவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்புதான் மரத்தின் அடியில் கல் பீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சொத்துப் பிரச்னை, நீதிமன்ற வழக்கில் இழுபறி, திருமணத்தடை, குழந்தைப் பாக்கியம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற, மாடசாமியை மனமுருக வேண்டிக்கொண்டு, மாலை சாற்றி, பன்னீர் தெளித்து, கற்பூரம் ஏற்றி, பித்தளை மணியை மரத்தில் கட்டி வழிபடுகிறார்கள். வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது அவர்கள் நம்பிக்கை.
இங்கே மாடசாமிக்கு உடைக்கப்படும் தேங்காய், பழம் எதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. தேங்காய், வாழைப்பழம் ஆகியவை கோயிலின் ஒரு பகுதியில் தனித்தனியே குவித்து வைக்கப் படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமைதோறும் மாடசாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டால் மாடசாமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள். நிலம், வீடு வாங்குதல், திருமணம் ஆகியவற்றிற்கு மாடசாமியிடம் பூ கட்டிப் போட்டு அனுமதி கேட்கிறார்கள், பக்தர்கள். மாடசாமியின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொடைவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கோயிலில் குவிந்துவிடுவார்களாம்.
அன்று உச்சிக்கால பூஜைக்கு மட்டுமே பெண்களுக்கு அனுமதி. மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது. மறுநாள் நடைபெறும் படைப்புப் பிரசாதத்தையும் ஆண்கள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்பது நியதி. அதையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் இங்கே நடைபெறும் பூஜை, கொடை விழாவில் மேளம் எதுவும் கிடையாது. மணிச்சத்தத்தில் மட்டுமே பூஜை நடைபெறுகிறது.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மாடசாமிக்குக் காணிக்கையாக ஆடு, சேவல்களை கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். இப்படியான நேர்த்திக்கடன் கோழிகளும் ஆடுகளும் ஊருக்குள் சுற்றித் திரிந்தாலும், மாலையில் அனைத்தும் கோயில் எல்லைக்குள் வந்து சேர்ந்து விடுகின்றன. அவை மாடசாமிக்குச் சொந்தமானவை என்பதால், எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.
அதேபோல் எவருக்கேனும் பொருள் ஏதேனும் திருடு போய்விட்டால், அதன் பொருட்டும் மாடசாமியின் சந்நிதியில் அருள்வாக்கு கேட்கிறார்கள். மாடசாமியின் அருளால் திருடுபோன பொருள்கள் 8 நாள்களுக்குள் மீண்டும் கிடைக்கும் என்பது, இப்பகுதி மக்களின் தீவிர நம்பிக்கை.
மட்டுமன்றி நிலம் குத்தகை, நில விற்பனை ஆகியவை குறித்த ஒப்பந்தங்களையும் மாடசாமியின் முன்பு வாய்வழி ஒப்பந்தமாகச் செய்துகொள்கிறார்கள். சாமியின் முன் செய்யப்படும் ஒப்பந்தம் என்பதால், அதன் விதிமுறைகளை மீறாமல் மாடசாமிக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.
இப்படி கலியுகத்தில் காக்கும் கடவுளாக நின்று காக்கும் மணிகட்டி மாடசாமி கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை போய்வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.