தூத்துக்குடி: வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி; காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு- கிராம மக்கள் மறியல்

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (10-ம் தேதி) 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். மாலை சுமார் 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீஸார், பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மாணவியின் உறவினர்கள் சாலை மறியல்
மாணவியின் உறவினர்கள் சாலை மறியல்

இதையடுத்து சுப்புராஜ் இன்று (11-ம் தேதி) காலை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, இன்று மாலை சுமார் 5 மணியளவில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குளத்தூர் – குறுக்குச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பள்ளி மாணவி காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்த்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *