சென்னை: சென்னையில் 11 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் குழுவை பனையூரில் அவர் சந்தித்துப் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களில் சிலர் இன்று தவெக தலைவர் விஜயை சந்தித்தனர். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை தவெக ஆதரிப்பதாக அவர்களிடம் விஜய் கூறினார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்தப் பின்னர் தூய்மை பணியாளர்கள் கூறும்போது, “எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும். அரசு வேலையில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வேலை செய்த நாங்கள் இந்தப் பணியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்துள்ளனர். இதற்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும். விஜய்யை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் நிலை கவலை தருவதாக விஜய் கூறினார். இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். சாதாரண குப்பை அள்ளுபவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் அரசு பணி வேண்டுமா என்கின்ற அடிப்படையில் எங்களை டீல் செய்கிறார்கள் என்பதையும் அவரிடம் எடுத்துரைத்தோம்” என்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தனியாரிடம் வேலையை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11- வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சா் சேகர்பாபு , மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனால், தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாதக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து விஜய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
.