தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு | Sanitation Workers’ Strike: 950 Arrested on Chennai Released

1373085
Spread the love

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப் ​பட்​டுள்​ளதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்கொண்டனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​கள் தோல்​வி​யில் முடிந்தன.

இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன் கிழமை மாலை அறிவுறுத்தியது.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்லவில்லை. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போலீஸார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். நள்ளிரவு 11.45 மணியளவில் தூய்மைப் பணியாளர்களை போலீஸார் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர். அப்போது போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள், ஆதரவாக போராடியவர்கள் உள்பட சுமார் 950 பேரை கைது செய்து 30 மாநகர அரசு பேருந்துகள் மூலம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கு போலீஸார் அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

கைது செய்து மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மை பணியாளர்களை இன்று காலை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் மண்டபம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை உள்ளே மற்றும் வெளியே தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. ரிப்பன் மாளிகை உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே போலீஸார் அனுமதிக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன? – இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத் திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

  • தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
  • தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
  • தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
  • தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
  • தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
  • பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி

* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *