தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | HC orders over Sanitation Workers’ Protest

Spread the love

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணைய விசாரணை உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் குறித்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் தங்கள் தரப்பு வாதம் கேட்கப்படவில்லை எனவும் கூறினார்.

அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் அரசு அச்சப்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், நாங்கள் அச்சப்படவில்லை ஆனால் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த உத்தரவு நியாயமானது அல்ல எனக் கூறினார்.

ஒருவேளை ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் புதிதாக ஒருவரை ஒரு நபர் ஆணையராக நியமிக்கலாம் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தனது விசாரணையை தொடங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் பத்தாம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், காவல்துறை தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒரு நபர் ஆணையத்திடம் சமர்பிக்கலாம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *