தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக கி.வீரமணி கோரிக்கை – Kumudam

Spread the love

வட சென்னை பகுதிகளில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல், பழைய பணி நிலைமையே தொடர வேண்டுமென சென்னை ரிப்பன் மாளிகைக்கு எதிரே 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 10-வது நாட்களாக போராடி வருகின்றனர். இன்று காலை நடைப்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

போராட்டக்குழுவினர் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.

2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் தான். வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர். பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 

‘‘அனைவருக்கும் அனைத்தும் என்பதே நமது இலக்கு’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.

நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். ‘நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே.

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *