தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | Madras High Court inquiry over sanitation workers protest

1376158
Spread the love

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது தூய்மை பணியாளர்களை தாக்கி, காவல் துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும் கூறி, ஜோதி என்பவர் உள்பட 12 பெண் தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், காவல் துறையினரின் அத்துமீறல் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல பெண் தூய்மை பணியாளர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

மனித உரிமை மீறலிலும், பாலியல் தொல்லையிலும் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 1400 பெண் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைப்பதற்கு ஆயிரம் ஆண் காவலர்களும், 200 பெண் காவலர்கள் மட்டுமே அழைத்து வரப்பட்டனர்.

போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டுமென காவல் துறைக்கு அறிவுறுத்தி இருந்தது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் வழிகாட்டி வழிமுறைகளையும் மீறி காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். அப்போது காவல் துறையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். தூய்மை பணியாளர்களுடன் சட்டவிரோத கும்பல் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியதுடன், பேருந்துகளையும் சேதப்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ ஆதாரங்களும் உள்ளதாக குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது புதிதல்ல என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என்று மனுதாரர்கள் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும்போது அது குறித்து வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுக வேண்டும் என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, போராட்டங்களை அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர் அனைத்து ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *