சென்னை: சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அரசு வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தென்காசி மாவட்டம், கழுநீர்குளம் ஊராட்சியில் மாணவி பிரேமா குடும்பத்திற்காக ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமான ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமா மழைக்காலங்களில் ஒழுகும் பழைய வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருதாக கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
மாணவி பிரேமா பேசிய 24 மணி நேரத்தில், அவருக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அரசு வீடு வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, அதன்படி அம்மாணவியின் தாயார் முத்துலெட்சுமி பெயரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை அடுத்தநாளே வழங்கப்பட்டது.
இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (29.10.2025) தென்காசிக்கு வருகை தந்த முதல்வர், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுநீர்குளத்திற்கு நேரில் சென்று பிரேமாவின் தாயார் முத்துலெட்சுமி, தந்தை சு.ராமசாமி ஆகியோரை சந்தித்து, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அவர்களது வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடினார்.
மேலும், பிரேமாவிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, உங்கள் வீடு கட்டி கொண்டிருக்கும் இடத்தில் இருந்து தான் பேசுகிறேன், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கு பிரேமா முதல்வருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.