தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.
அவர்களில் சிலரை மட்டும் ஆட்சியர் மனு அளிக்க உள்ளே செல்லுமாறும், மற்றவர்கள் வெளியே இருக்குமாறும் போலீஸார் அறிவுறுத்தினர். அப்போது, போலீஸாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களிடம் விவசாயிகள் கூறும்போது, “வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்வதற்கே அச்சமாக உள்ளது. கூலித் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு வர மறுக்கின்றனர். யானைகளை நிரந்தரமான வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அனைத்து யானைகளையும் நிரந்தரமான வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அவை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் யானைகளை மயக்க ஊசி செலுத்தி வேறு வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.
அவர்களிடம் வனத்துறையினர் கூறும்போது, “இன்னும் ஒரு வாரத்துக்குள் வடகரையில் நேரில் கள ஆய்வு செய்யப்படும். 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கும். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி, மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வராதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர். இதையடுத்து, விவசாயிகள் மனு அளித்து கலைந்து சென்றனர்.
குறும்பலாப்பேரியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் என்பவர் அளித்துள்ள மனுவில், “குலசேகரப்பட்டி ஊராட்சியை கல்லூரணி ஊராட்சியுடன் இணைத்து பாவூர்சத்திரம் பேரூராட்சி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. குலசேகரப்பட்டி ஊராட்சியின் தொன்மையை அளிக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும். பேரூராட்சியாக மாற்ற வேண்டுமெனில் குலசேகரப்பட்டி பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தீக்குளிக்க முயற்சி: ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆவுடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதே பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.13.50 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காததால் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.
இதேபோல், குத்துக்கல்வலசை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்தபோது பெட்ரோல் கேன் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.