தென்காசி – திருச்செந்தூர் இடையே ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை | Extension of platforms at railway stations between Tenkasi-Tiruchendur

1307817.jpg
Spread the love

தென்காசி: தென்காசி – திருச்செந்தூர் இடையே ரயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் மிக முக்கிய வழித்தடமான திருச்செந்தூர் – திருநெல்வேலி – தென்காசி – கொல்லம் ரயில் வழித்தடத்தில் திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் இல்லாத காரணத்தால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் செங்கோட்டை – தாம்பரம் வார மும்முறை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களிலும் 24 பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்கெனவே மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களிலும், திருநெல்வேலி – தென்காசி இடையே சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்கவும், செங்கோட்டை – புனலூர் இடையே புதுஆரியங்காவு, தென்மலை, எடமண் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 18 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 450 மீ அதிகரிக்கவும், அவனீஸ்வரம், குரி, கொட்டாரக்கரை, குண்டாரா கிழக்கு குண்டாரா, சந்தனத்தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டர் அதிகரிக்கவும் முன்மொழிவு செய்யப்பட்டது.

இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் – காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள அறந்தாங்கி, பேராவூரணி, அதிராமபட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிகளை ஆறு மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை ரயில்வே கோட்டத்தில் தென்காசி- திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறும்போது, ”தற்போது கூட்ட நெரிசலை தவிர்க்க செந்தூர் எக்ஸ்பிரஸிலும், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயிலிலும் கூடுதல் தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது. 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டால்தான் இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியும். மேலும் பண்டிகை காலங்களில் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை இயக்கவும் முடியும். தெற்கு ரயில்வே உடனடியாக தென்காசி – திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *