சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் – தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் சங்கல்பம் செய்திருக்கிறார்கள் போலும்!
மேலும் பக்தரானவர் தன்னுடைய தாய் – தந்தை, மனைவி – மக்களுடன் குடும்ப சமேதராக பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

என்றாலும் பக்தர்கள் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும்.
தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
“தான் செய்த தவற்றுக்காக வருந்தி, அந்தத் தவற்றை மீண்டும் செய்யமாட்டேன்’ என்று உறுதி பூண்ட பக்தர்கள், தாங்களே கருவறைக்குச் சென்று இறைவனுக்குத் தன் கையாலேயே நெய் அபிஷேகம் செய்யலாம் எனும் வழக்கம் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வயதான தாய்மார்கள் தங்களின் சொந்தப் பிள்ளையாகக் கருதி, ஐயன் ஐயப்பனுக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகித்து அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இளம் வயதினரோ இந்த ஐயப்பனைத் தங்களின் தகப்பனாராகக் கருதி வணங்குகிறார்கள். குழந்தைகளோ தங்களில் ஒருவனாக ஐயனைப் போற்றுகிறார்கள்.
பொதுவாக ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது அவர்கள் குடும்பமும் விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து ஐயனைத் தரிசனம் செய்ய முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படி ஓர் அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அருளும்.
ஆண்டில் ஒருமுறை சபரிமலை சென்று வந்தபின்னர் சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து இந்த ஆலயத்துக்குக் குடும்பத்தோடு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஐயனின் அன்பு தரிசனம் ஆனந்தம் அளிக்கும்.