
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பல்வேறு சொத்து தகராறு வழக்குகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் ஏதோ ஒரு வழக்கு தொடர்பாக இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சரியான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூரப் படுகொலையை அடுத்து, நேற்று (3.12.2025) மாலை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தென்காசி நகரில் கொலைக் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று (4.12.2025) காலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 300க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து, கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர். தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட பார் கவுன்சில் உறுப்பினர்கள் என பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.