சென்னை: தென்சென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய் அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும் பகுதிகள், முகத்துவாரப் பகுதிகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்சென்னை பகுதியில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக, ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக காரப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலப் பணி நடைபெற்று வரும் பகுதியில் மடுவின் கரைகளை அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர் எளிதாக கடலுக்குச் செல்லும் வகையில், கண்ணகி நகர் பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ஒக்கியம் மடுவு காரப்பாக்கம் பாலத்தின் கீழ்புறம் தூர்வாரும் பணிகளையும் அப்பகுதியில் மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளையும், கண்ணகி நகர் பகுதியில் இடதுபுற கரை, தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர், பணிகளை விரைவாக முடிக்குமாறு நீர்வளத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதன் பிறகு சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் நீர் எளிதாக செல்வதற்காக, மேடவாக்கம், சோழிங்கநல்லூரை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.