திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ள அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் இருந்து திங்கள்கிழமை அதிகாலையில் கிட்டத்தட்ட 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சூறையாடியது. வெள்ளத்தின் அகோர பசிக்கு நூற்றுக்கணக்கான கிராமங்கள் இறையாகின.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் நேற்று (டிச.2-) அடித்து செல்லப்பட்டுள்ளன. தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.15.90 கோடியில் 7 மீ., உயரத்தில், 12 மீ., அகலத்தில் 250 மீ., நீளத்தில், 12 கண்களுடன் பாலம் கட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்ட 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் இடையே தென்பெண்ணையாற்றில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை கடந்த செப்டம்பர் 2-ம் தேதி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சி 3 மாதம் கூட நீடிக்கவில்லை. வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் கடந்த காலங்களில் திறந்து விடப்பட்ட அதிகபட்ச தண்ணீர் மற்றும் எதிர்காலத்தில் அதி கன மழை பெய்ததால், அணையில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து கணக்கீடு செய்யாமல் கட்டி உள்ளனர்.
இதனால் ஒரு முறை வந்த வெள்ளத்துக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல், உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. தண்ணீருடன் ரூ.15.90 கோடி கலந்துவிட்டது. பாலத்தில் இருந்த உறுதி தன்மையும் கேள்விக் குறியாகி இருக்கிறது. தரமான முறையில் பாலம் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, வல்லுநர் குழு ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
விளக்கம்: இதற்கிடையில், தென்பெண்ணையாற்றில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் பாலம் அடித்து செல்லப்பட்டதாக, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் செ.தேவராசு (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் என்பது 54,417 கனஅடியாகும். ஃபெஞ்சல் புயல் காரணமாக, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், பாலத்தின் மேற்பரப்பில் 4 மீ., உயரத்தில் தண்ணீர் சென்றுள்ளது. நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால், பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மறைக்கப்பட்ட தண்ணீரின் அளவு: நீர்வளத் துறையினர் தரப்பில் அதிகபட்சமாக விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டதற்கு, 2 லட்சம் கனஅடிக்கு கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்த பிறகும், சாத்தனூர் அணையின் நீர்மட்டத்தை குறைக்காமல், 117 அடி (மொத்த உயரம் 119 அடி) பராமரிக்கப்பட்டுள்ளது. இதனால், அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்தால், 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. 2 லட்சம் கனஅடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது மக்களுக்கு தெரியப்படுத்தாமல், மூடி மறைக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசு சொல்வது என்ன? – பாலம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்த பாலத்தின் விவர அறிக்கை இது:
நீளம் – 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் – 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் – 7 மீ. நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் (Design Discharge) 54,417 கன அடி.
திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.