தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கு: கடலூர் – புதுச்சேரி எல்லையில் மதுக் கடைகள் மூடல் | Liquor shops closed on Cuddalore Puducherry border

1342035.jpg
Spread the love

புதுச்சேரி: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கலால் துறை உத்தரவையடுத்து, கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதிகளில் மதுபானம் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் ஏராளமானவை இயங்கி வருகின்றன. இங்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளைச் சேர்ந்த மது பிரியர்களும் அதிகளவில் வந்து மது குடித்துவிட்டு செல்வதுண்டு. குறிப்பாக கடலூரில் இருந்து புதுச்சேரி எல்லைப் பகுதிக்கு வரும் மதுப் பிரியர்கள் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம், தரைப்பாலம் வழியாக வந்து மதுகுடித்துவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. கனமழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கொம்மந்தான்மேடு பகுதியில் உள்ள தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கின. இதனால் அப்பகுதிகள் மட்டுமின்றி கடலூரில் இருந்து புதுச்சேரி எல்லைக்குள் வரும் சாலைகள் பலவும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி எல்லையான முள்ளோடை பகுதியில் கடலூர் – புதுச்சேரி சாலையின் குறுக்கே தண்ணீர் ஓடுவதால் அங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதிகளில் இயங்கிய மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் இயங்கிய மதுக்கடைகள், சாராயக்கடைகள் செவ்வாய்க்கிழமை உடனடியாக மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இது பற்றி கலால்துறை அதிகாரிகள் கூறும்போது, “தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் புதுச்சேரி எல்லை பகுதிகளான முள்ளோடை, கன்னியக்கோயில், சோரியாங்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள 17 மதுக்கடைகள் மற்றும் 6 சாராயக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவை மூடப்பட்டுள்ளன. வெள்ளநீர் குறைந்த பிறகு அவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *