கடலூர்: தென்பண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு, 35 நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, சி.வெ.கணேசன் ஆகியோருடன் நேற்று பார்வையிடார். தொடர்ந்து, மேல்பட்டாம்பாக்கம் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,200 பேருக்கு உணவு, ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, கடலூர் மஞ்சக்குப்பம் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 600 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் தென்பண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட, 4,321 குடும்பங்களைச் சேர்ந்த 6,601 ஆண்கள், 7,108 பெண்கள், 1,129 குழந்தைகள் என மொத்தம் 15,712 பேர் மீட்கப்பட்டு, 35 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த 261 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 341 குடிசை வீடுகள் பகுதியளவிலும், 10 குடிசை வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன. 71 கால்நடைகள் மற்றும் 2,520 கோழிகள் உயிரிழந்துள்ளன. உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அறவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் 2 பெண்கள், ஒரு பெண் குழந்தை என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 360 மின்கம்பங்கள் மற்றும் 2 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 77 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது பணியை முறையாக மேற்கொண்டு, மக்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், மேயர் சுந்தரி ராஜா, ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் தலைவர் நந்தகுமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் உடனிருந்தனர்.