திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்த, மகளிரணி மாநில நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சியானது கலந்துரையாடலில் ஆரம்பித்து ‘பாட்டரங்கமாக’ முடிந்துள்ளது. பிங்க் கலர் சேலை அணிந்து மகளிரணியினர் பங்கேற்ற இந்த ‘பாட்டரங்க’ நிகழ்வு தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பில் பங்கேற்று பாடல்களைப் பாடி, கனிமொழியின் பாராட்டுக்களைப் பெற்ற சேலம் முன்னாள் மேயரும், திமுக மகளிரணியின் டெல்டா மண்டலப் பொறுப்பாளருமான ஜெ.ரேகா பிரியதர்ஷினியிடம் பேசினோம். “திமுக முப்பெரும் விழாவில், அக்காவுக்கு (கனிமொழி) பெரியார் விருது வழங்கப்பட்டது. அதற்கு பாராட்டுத் தெரிவிக்க, சென்னையில் தனியார் ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு கடந்த 12-ம் தேதி ஏற்பாடு செய்தோம். மாநில மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன் மற்றும் மகளிரணி, மகளிர் தொண்டரணி, பிரச்சாரக் குழு, வலைதளப் பொறுப்பாளர்கள் என 30 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இதில் அரசியல் விவாதங்கள் இல்லாமல், பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, ‘ரேகா நன்றாகப் பாடுவார்’ என்று நாமக்கல் ராணி சொல்ல, கனிமொழி அக்கா என்னைப் பாடுமாறு கூறினார். நான் ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ…’ பாடலை பாடி முடித்தேன். அக்கா எனது பாட்டை தாளம்போட்டு ரசித்ததுடன், கைதட்டி பாராட்டினார்கள்.
அடுத்து, ’காலைக் கனவினில் காதல் கொண்டேன்’ என ‘தக் லைப்’ படப் பாடலை சேலம் சுஜாதா பாடினார். சிலர் கவிதையும் படித்தனர். நாங்கள் பாடியதை எல்லாம் கேட்டு, அக்கா ரொம்பவே உற்சாகமாகி ரசித்தார். அதோடு, மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், இசைக்குழு வைத்து நடத்துபவர் என்பதால் அவரிடம், ‘உங்களுக்குப் போட்டியாக நிறையப் பாடகர்கள் வந்துவிட்டார்கள் போல’ என்று சிரித்தபடியே கமென்ட் அடித்தார்.
‘அனைவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். உங்களுக்கு அடுத்தடுத்து நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன. பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்’ என்று அக்கா அட்வைஸ் கொடுத்தார். 2 மணி நேரம் மகிழ்வுடன் கலந்துபேசிவிட்டு, லஞ்ச் சாப்பிட்டுப் புறப்பட்டோம்” என்றார் அவர்.
அரசியல் கட்சி நிர்வாகிகள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் யார் மீதாவது குறை சொல்லிப் பேசுவதும், கோஷ்டி அரசியல் செய்வதும் தான் நடப்பது வழக்கம். அதற்கு விதிவிலக்காக திமுக மகளிரணியின் இந்த ‘கெட் டூ கெதர்’ நிகழ்ச்சி, அரசியல் ஏதும் பேசாமல் மகிழ்ச்சிகரமான சந்திப்பாய் நடந்து முடிந்திருப்பது வியக்கத்தான் வைக்கிறது.