தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி | cm stalin inaugurated electric car factory in tuticorin

1371918
Spread the love

தூத்துக்குடி: தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’ நிறுவன தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். இதில் முதல்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு பணிகள் முடிந்து, கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் திறன் பயிற்சி பெற்று, இந்த தொழிற்சாலையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 229 டிப்ளமோ மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: நாட்டின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தி, மின் வாகன உற்பத்தியின் தலைமையகமாக திகழ்கிறது. பெரும்புதூரில் முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதுபோல, தற்போது தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தி திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 18 மாதங்களில், உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இதுவரை ரூ.1,300 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகன எஸ்யுவி கார்கள் இங்கு உற்பத்தியாக உள்ளன. இதன்மூலம், இந்த வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. இதனால், தூத்துக்குடி மட்டுமின்றி, தென் மாவட்டங்கள் மிகப் பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சியடையும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

49,845 பேருக்கு வேலைவாய்ப்பு: இதை தொடர்ந்து, தூத்துக்குடியில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ரூ.265.15 கோடி முதலீடு மற்றும் 1,196 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரூ,1,230 கோடி முதலீடு மற்றும் 3,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, ‘‘துறைமுகமும், இயற்கை வளமும், திறமையான மனிதவளமும் நிறைந்துள்ள தூத்துக்குடியை தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம். தென் மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற் பூங்காக்கள், தொழிற்சாலைகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. நீர் தேவையை நிறைவு செய்ய, கடல்நீரை குடிநீராக்கும் ஆலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

தென் தமிழகம் இதுவரை பார்க்காத, தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம். வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைப்பதால், அந்த வட்டாரத்து மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். தூத்துக்குடி பகுதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாக்கும் வகையில், பசுமை ஹைட்ரஜன், சோலார் மின்உற்பத்தி நிறுவனங்களை, தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் கொண்டு வந்துள்ளோம். எங்களது பெரு முயற்சியால் கடந்த 4 ஆண்டுகளில், ரூ.10.30 லட்சம் கோடி அளவுக்கு, உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32.29 லட்சம் பேருக்கு உறுதியளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்துள்ளோம்’’ என்றார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, கீதாஜீவன், சாத்தூர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மேயர் ஜெகன், ஜி.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ, தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலர் அருண் ராய், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை, தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் அழகுசுந்தரம், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *