தென்காசி: கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளையனரேந்தல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று கால 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 300 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் நெல்லையிலும் பரவலாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மாஞ்சோலை எஸ்டேட் ஊத்துமலையில் 500 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கேடிசிசி (காஞ்சி, திருவள்ளூர், சென்னை, செங்கை) மண்டலத்தைப் பொறுத்தவரை ராணிப்பேட்டையில் கனமழை பெய்தது.
கும்பகோணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சுவாமிமலை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேரோட்டம் எப்போது நடத்தப்படும் போன்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? – திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கரூர், திருவாரூர், தருமபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்