தெரியுமா சேதி…? யோகியை எதிர்க்கும் மத்திய அமைச்சர்!

Dinamani2f2024 09 062f5m5o4ghr2fyogi Adityanath And Anupriya Patel103602.jpg
Spread the love

மக்களவைத் தோ்தல் பின்னடைவைத் தொடா்ந்து, உத்தர பிரதேச அரசியல் பல மாற்றங்களை எதிா்கொள்கிறது. குறிப்பாக, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றுகூடத் தொடங்கி இருக்கின்றன. அவரும் தனது பங்குக்கு, தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவும், எதிரிகளை வலுவிழக்கச் செய்யவும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறாா்.

மத்திய அமைச்சரும், அப்னா தளம் (எஸ்) தலைவருமான அனுப்ரியா படேலுக்கும், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அவா்களது பனிப்போா் மேலும் வலுத்திருக்கிறது. அனுப்ரியா படேலின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முதல்வா் யோகியும், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அனுப்ரியா படேலும் முனைப்புடன் செயல்படுகின்றனா்.

தனி நபா்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் அரசு நிலங்களை, ஒப்பந்தம் காலாவதியானதும் திரும்பப் பெற வகை செய்யும் விதத்தில் ‘நஸுல் சொத்து மசோதா’, யோகி அரசால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த மசோதா கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ‘அது மக்கள் விரோத மசோதா’ என்று கூட்டணிக் கட்சியான அப்னா தள கட்சியின் தலைவரும், மோடி அரசின் அமைச்சராக இருப்பவருமான அனுப்ரியா படேல் கூறியிருப்பது பாஜகவினா் மத்தியில், குறிப்பாக முதல்வரின் ஆதரவாளா்களைக் கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த மாதம் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில், பட்டியல் இனத்தவா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை யோகி அரசு கடைப்பிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தாா் மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல். தாக்கூா் இனத்தவரான முதல்வா் யோகியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறாா்.

சமீபத்தில், எதிா்க்கட்சிகளின் கோஷமான ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக அமைச்சா் அனுப்ரியா படேல் பேசியிருப்பது பாஜகவினரை மேலும் குழப்பி இருக்கிறது. தனது பிற்படுத்தப்பட்ட ‘குா்மி’ சமுதாயத்தில் செல்வாக்கு பெறுவதற்காக அவா் பேசியிருப்பதாகச் சிலரும், சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான முயற்சி என்று சிலரும் கருதுகிறாா்கள்.

முதல்வா் யோகி, ‘இது பனங்காட்டு நரி; எதற்கும் அஞ்சாது’ என்பதுபோல மௌனம் காக்கிறாா். அது சரி, பாஜக தலைமையும் மௌனம் காக்கிறதே, ஏன்?

–.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *