தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை | Madras HC suggests to explore and follow methods followed by foreign countries in handling stray dogs

1375380
Spread the love

சென்னை: வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது, என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் – சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தெரு நாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிப்பது தொடர்பாக, விரிவான திட்டத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தெரு நாய் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், தெரு நாய் விவகாரம் தீவிரமானது. தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து அதே பகுதிகளில் விடும் பட்சத்தில், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள் என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அவற்றுக்கு உணவளிக்கச் செல்வதற்கு யாருக்கு தைரியம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுபோன்ற நாய்களை கையாள வேறு நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை சட்டத்தைச் சுட்டிக்காட்டி, தொண்டு நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்யும் என்பதால், வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என யோசனை தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *