தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் நகையை போலீஸிடம் ஒப்படைத்த சென்னை ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு | Auto driver handing over 40 pounds of gold jewellery to chennai police

1351186.jpg
Spread the love

சென்னை: திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் (40). இவர் கடந்த 15-ம் தேதி மாலை வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அரும்பாக்கத்திலிருந்து அவரது ஆட்டோவில் சவாரியாக ஏற்றிச் சென்று, அண்ணாநகரில் இறக்கி விட்டு சென்றார். பின்னர், சரவணன் ஆட்டோவை ஓட்டி செல்லும்போது அவரது ஆட்டோவின் பின் சீட்டில் ஒரு பை இருப்பதை கண்டார். அந்தப் பையை எடுத்து பார்த்தபோது, அதில், தங்க நகைகள் மற்றும் செல்போன் இருந்தது தெரியவந்தது. உடனே சரவணன் அந்த தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய பையை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸார் அண்ணாநகர் பகுதியில் விசாரணை செய்து, 40 பவுன் தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நித்தேஷ் (39), அவரது தந்தை பண்டிட் நேரு, நித்தேஷின் மனைவி ஆகியோரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், மூவரும் சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்துக்காக வந்து, ஆட்டோவில் செல்லும்போது தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்டது தெரியவந்தது.

17397908013400
பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மேலும், அவர்கள் கூறிய பை மற்றும் தங்க நகைகளின் அடையாளங்களை வைத்தும், ஆட்டோ ஓட்டுநர் சரவணனை கொண்டு மூவரையும் பார்த்து உறுதி செய்தனர். இதையடுத்து, 40 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய பை அதன் உரிமையாளர் நித்தேஷிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த காவல் ஆணையர் அருண், நேர்மையுடன் செயல்பட்டு தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணனை இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு: இதனிடையே, 2020-ம் ஆண்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 10 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமியையும் காவல் ஆணையர் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *